நாங்குநேரியில் ஆர்வமுடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி
நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆர்வமுடன் 88 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்து சென்றுள்ளார்.
நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆயிரத்து 460 பேர் தேர்தல் பணிகளிலும், 2 ஆயிரத்து 500 காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
கே.டி.சி நகர் வாக்குச்சாவடியில் 88 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார். இருசக்கர வாகனத்தில் அழைத்துவரப்பட்ட அவர், வரிசையில் நிற்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டார்.