"உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்" - சீமான்

"உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்" - சீமான்
"உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்" - சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி முடிவுகள், போட்டியிடும் தொகுதி அறிவிப்புகள், வேட்பாளர்கள் அறிவிப்புகள் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பல இடங்களில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டி வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் அவரவர்களுக்கு ஆதரவான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன. இதற்கிடையே சீமான் ஒருங்கிணைப்பாளராக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு, அவர்கள் கேட்டிருந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு சின்னம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது. 

சின்னம் அறிமுகம் குறித்து இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், எனக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏன் கொடுக்கப்பட்டது என்றால், உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன் என்றுதான். உழவு இல்லை என்றால் உணவில்லை. உணவில்லை என்றால் உயிர்களில்லை. உயிர்கள் இல்லை என்றால் உலகமில்லை. அதனால் உழவை மீட்போம் உலகை காப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். 20 பெண் வேட்பாளர்கள். 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கவுள்ளனர். அதே போல் இடைத்தேர்தலிலும் பாதிக்கு பாதி பெண்கள் களம் இறக்கப்படுவார்கள். வரும் 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com