வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு: மறுதேர்தல் நடத்த சந்திரபாபு நாயுடு கடிதம்!
ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படாத பகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அணையருக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக் குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்தி ரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் , ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அங்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் செயல்படாததால் வாக்களிக்க முடியாமல் பல வாக்காளர்கள் திரும்பினர். காலை 9.30 மணி வரை சில இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ’’ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை, இதனால் வாக்காளர்கள் வாக்க ளிக்காமல் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வந்து வாக்களிக்க வாய்ப்பில்லை என்பதால், அந்தப் பகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.