இயற்கை உபாதைக்கு சென்ற இளம் பெண் கத்திக் குத்து காயங்களுடன் கண்மாயில் சடலமாக மீட்பு
திருமங்கலம் அருகே இளம்பெண் குத்திக்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தவிடன் - முத்துலட்சுமி தம்பதியின் மகள் ஜெயசக்தி பாலா (18). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது நிரம்பாததால் அருகிலிருந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு, 18 வயது பூர்த்தி ஆகும் வரை காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயசக்தி பாலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இயற்கை உபாதைக்கு செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பல இடங்களில் இரவு முழுவதும் தேடிவந்தனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று காலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் கண்மாய்க்குள் இயற்கை உபாதைக்கு சென்றவர், டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பேரையூர் சரக டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் இறந்த பெண்ணின் உடலை ஆய்வு செய்த போது 13 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இறந்த பெண் யாரென விசாரணை மேற்கொண்டதில், நேற்று இரவு காணாமல் போன தவிடன் மகள் ஜெயசக்தி பாலா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஹெட்போன் கிடைத்துள்ளதாகவும், இறந்த பெண்ணின் செல்போனை காணவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி சுஜித் குமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். இயற்கை உபாதைக்காக சென்ற இளம்பெண் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டு கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெண்ணின் தந்தையும் தாயும் கூறுகையில், தனது மகளை கேலி செய்ததாக ஏற்கனவே கிராமத்து இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளி வந்துள்ளதாகவும் இந்த கொலைக்கும் அந்த இளைஞருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்தனர்.