திருடிய நகைகளை வீட்டு வாசலில் வீசிச்சென்ற திருடன்
திருடுபோன நகையை வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அம்பலவாணபுரம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சுந்தர லீலா . இவரது மகனும் மகளும் வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் இறந்து விட்டதால் தனியாக வசித்து வரும் சூழலில் கடந்த 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் சாவியை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து விட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 96 கிராம் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும். இதுகுறித்து சுந்தர லீலா வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலை திருடுபோன 96 கிராம் செயின் வீட்டு வாசலில் கிடந்தது. இதனை கண்ட சுந்தர லீலா வி.கே.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து நகைகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

