அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரன் பொறுப்பு குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாததாலேயே குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு அவரை அழைக்கவில்லை என்று பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வழியில் மதுரை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ் கூறுகையில், “பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகத்தில் 15 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. பாஜகவை நாடு முழுதும் கொண்டு செல்வதற்கு இன்று முதல் முகாம் நடைபெறுகின்றது. மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வது முகாமின் நோக்கம், தமிழகம் ஜிகாதி தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. தொடர்ந்து பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள், இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறி விட்டது. ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. டிடிவி தினகரன் தன்னை தனி தலைவராக காட்டவில்லை, அவர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக மட்டுமே இணைந்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளால் ஜனாதிபதி தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவை மத்திய அரசு மறைமுகமாக இயக்கவில்லை. அதிமுக அரசு தற்போது நிலையான அரசாக உள்ளது” என்று அவர் கூறினார்.