மும்பை Vs டெல்லி: புள்ளிகள் பட்டியலில் முந்தப்போவது யார்?
14 ஆவது ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு களம் காண்கிறது.
நடப்பு சீசனில் இரு அணிகளுமே இதுவரை தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. மும்பை அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் தோற்று கடந்த 2 ஆட்டங்களில் வென்றுள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அந்த அணி களம் காணும்.
மும்பையை பொறுத்தவரை ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள். ஆனால் நடுவரிசை ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் முழுமையான பார்முக்கு திரும்பவில்லை.
பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, போல்ட் கூட்டணி சிறப்பாகவே செயல்படுகிறது. சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹரும் அபாரமாகச் செயல்படுகிறாா் என்பதால் மும்பை பந்துவீச்சில் வலுவாகவே இருக்கிறது.
டெல்லியைப் பொருத்தவரை, தொடக்க வீரா்களில் ஒருவரான ஷிகா் தவன் அட்டகாசமான ஃபாா்மில் இருக்கிறாா். அதேபோ பிருத்வி ஷாவும் அசத்துகிறார். மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் உள்ளனர். அதேபோல ஆல்-ரவுண்டா்கள் வரிசையில் ஸ்டாய்னிஸ், லலித் சிறப்பாக விளையாடுகின்றனர்.
டெல்லியின் பவுலிங்கில் ரபாடா, வோக்ஸ் வேகப்பந்துவீச்சு கெத்தாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சுக்கு அமித் மிஸ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் நல்ல பார்மில் இருக்கிறார்கள் என்பதால் தலைநகர் அணிக்கு கவலையில்லை. மும்பை - டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.