‘அம்மா சொல்றேன் எழுந்திரு...’- இறந்துபோன குட்டி மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்ற தாய் யானை #Video

இறந்துபோன தன் குட்டி யானை, மயக்க நிலையில் இருப்பதாக நினைத்து தண்ணீர் தெளித்து எழுப்ப நினைத்த தாய் யானையின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
தாய் யானை
தாய் யானை Twitter

உலகத்தில் பெரிய துக்கம் எது என்று கேட்டால் ஒரு தாய் தன் குழந்தையை இழந்த துக்கம் என்பதாகத்தான் இருக்கும். ஜீரணிக்கவே முடியாத இந்த மனவேதனையானது மனிதர்களை விட விலங்குகளுக்கு அதிகமாகவே இருக்கும். அதற்கு சான்றுதான் இத்தாய் யானை. இந்த தாய் யானை, இறந்த தனது குழந்தையை (குட்டி யானையை) உயிர்ப்பிக்க முயலும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயக்கம் அடைந்ததாக நினைத்து தண்ணீரில் போட்டு உயிரூட்ட முயற்சித்த தாய் யானை!

அசாம் மாநிலம் கோஸ்வரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டத்தை விட்டு வெளியேறிய குட்டி யானை வழியில் எப்படியோ இறந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய குழந்தை மயக்கம் தான் அடைந்திருப்பதாக நினைத்த தாய் யானை, குழந்தையை எப்படியும் எழுப்பி விடலாம் என சுமார் 2 கிமீ தூரத்திற்கு தூக்கிச்சென்றுள்ளது.

தாய் யானை
தாய் யானைTwitter

2 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு நதிக்கு தூக்கிச்சென்ற தாய் யானை, தண்ணீரில் குழந்தையான தன் குட்டி யானையை போட்டு எழுப்ப முயற்சிக்கிறது. குட்டி எழாததால் மனவேதனையில் வேகமாக பிளிறிய தாய் யானை, அருகில் இருக்கும் செடி கொடிகளை எல்லாம் பற்றி இழுத்து எறிகிறது. தொடர்ந்து தன் குட்டியை உயிரூட்டி விடலாம் என மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் தாய் யானையின் செயல் காண்போரை கலங்கச்செய்கிறது.

இது என் இதயத்தை உடைத்துவிட்டது! - யானை வீடியோவை பகிர்ந்த IFS அதிகாரி

யானையின் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் IFS அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் என் இதயத்தை உடைத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் பதிவில், “இது என் இதயத்தை உடைத்து விட்டது. அந்த குட்டி இறந்துவிட்டது, ஆனால் தாய் விடவில்லை. இறந்த தன் குழந்தையை 2 கிமீ தூரம் சுமந்து சென்று தண்ணீரில் போட்டு உயிர்ப்பிக்க முயல்கிறது. தாயின் அழுகை காற்றையே கிழிக்கிறது” என்று கண்ணீர் எமோஜியோடு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com