அதிகமாக பணம் கொடுத்தோர் முன்னிலை: பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன்
ஆளுங்கட்சியை விட அதிகமாக பணம் கொடுத்தோர் முன்னிலை பெற்றுள்ளனர் என்று பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு ஒரு வாக்கு கிடைத்தாலும் அது உண்மையான வாக்கு. மையிலாப்பூர் தொகுதியில் 12 வாக்குகள் பெற்றோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகளில் 3-ம் இடத்தில் பாஜக வந்தது. எங்கள் வாக்குகளை மீண்டும் மீட்டெடுப்போம். மக்களை திருத்துவோம். தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதை போல் ஒரு தவறான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதால், மக்கள் ஓட்டுப் போடாமல் இருப்பார்கள். அதனையும் நாங்கள் முறியடிப்போம். ஆளுங்கட்சியை விட அதிகமாக பணம் கொடுத்தோர் முன்னிலை பெற்றுள்ளனர்” என்றார்.
மேலும், “தேர்தலை மனசாட்சி முடிவு செய்யவில்லை, பணம்தான் முடிவு செய்துள்ளது. இது உண்மையான தேர்தலே இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் செலவு செய்தால்தான் வெற்றி பெறுவேன் என்றால் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும். எப்படி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். ஊடகங்கள், காவல்துறை, தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்தே நடந்துள்ளது. எல்லோருடைய கைகளும் கட்டப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் காலம் இனி திரும்பி வராது. நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது. இந்த முடிவு முடிவு தான்” என்றும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.