பொருளாதாரத்தை சீரழித்ததுதான் மோடி அரசின் சாதனை: மு.க.ஸ்டாலின்
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் ஈடுபடவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், ஆதார், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹாவும், சுப்ரமணியன் சுவாமியும் கடுமையாக விமர்சித்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் மீது பலவித வரிகளை விதித்து, வணிக வளர்ச்சியை சிதைத்து, பொருளாதாரத்தை சீரழித்ததுதான் மோடி அரசின் வேதனை மிகுந்த சாதனை.
கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் மீண்டும் உயருமானால் இந்திய பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சம் அனைத்து தரப்பையும் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் டாலர் நகரம் என கூறப்படும் திருப்பூரில் பின்னலாடை தொழில் நசிவடைந்ததும், திண்டுகல்லில் தோல் ஏற்றுமதி வணிகம் முடங்கியதும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் நிர்வாகத் திறன் எப்படி இருக்கிறது என்பதற்கு வேதனைக்குரிய சாட்சிகளாக இருக்கின்றன. நாட்டுப்பற்று மிக்கவர்களை கூட தேசவிரோதிகள் என்று சித்தரிக்கும் போக்கினால், உழைக்கும் மக்களை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

