தேர்வுமுறையில் நவீன தீண்டாமை: நீட் மீது நடிகர் சூர்யா தாக்கு!
கல்வி மற்றும் தேர்வு முறைகளில் நவீன தீண்டாமை நிலவுவதாகவும், பொதுப் பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்றினால் மட்டுமே மீண்டுமொரு அனிதா உருவாகாமல் தடுக்க முடியும் எனவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் மாணவர்களையும், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வரும் மாணவர்களையும் நீட் போன்ற பொது நுழைவுத்தேர்வில் சோதிப்பது எவ்வளவு பெரிய வன்முறை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வசதிக்கேற்ப விதவிதமாக பாடத்திட்டங்கள், பாகுபாடுள்ள பள்ளிகள், கல்விமுறை என்ற நிலையிருக்கும் போது அனைத்து மாணவர்களும் ஒரே விதமான தேர்வு முறையில் வெற்றி பெற வேண்டும் என்பது நாகரீக சமுதாயம் செய்கிற வேலையில்லை என்றும் அவர் சாடியுள்ளார். தீண்டாமையின் நவீன வடிவமாக தரமான கல்வி, தகுதியான மாணவர்கள் என்ற முழக்கங்கள் முன்வைக்கப்படுவதாகவும் நடிகர் சூர்யா ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்தியா என்பது ஒரே தேசம் என்பதால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடு என அதனை சுருக்கிவிட முடியாது. ஒரு மாநிலத்தின் தனித்துவமான கல்விப் பிரச்னையை அதைப்பற்றி புரிந்துக்கொள்ள முடியாத பல்வேறு எம்.பி.க்கள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். கல்வியில் சீர்கேடு என்பது அடிமடியில் கைவைக்கும் வேலை என்பதை அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர்ந்து செயல்படவும் சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார். சமூகநீதிக்கான போராட்டங்களில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தனித்துவத்தை தமிழகம் இழந்துவிடக்கூடாது என்றும் நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.