கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் காலையில் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன் மாலையில் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவை சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி பரபரப்பாக இயங்கி வரும் கமல்ஹாசன், அகில இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.