எம்எல்ஏ-க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?: நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் மக்கள் வறுமையால் அவதிப்படும் நிலையில் எம்எல்ஏ-க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒன்றில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் "தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வறுமையால் கஷ்டப்படுகின்றனர். இந்த நேரத்தில் எம்எல்ஏ-க்களின் சம்பளம், இதரபடி உள்ளிட்டவை 55,000 ரூபாயிலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் எம்எல்ஏ-க்கள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தங்கள் தரப்பு வாதங்களை எந்தவித ஆதார ஆவணமும் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். தமிழகத்தில் மக்கள் வறுமையால் அவதிப்படும் நிலையில் எம்எல்ஏ-க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, வறுமை, தற்கொலை, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில்தான் தமிழகம் இருப்பதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் ஊதிய உயர்வு தேவை தானா என எம்எல்ஏ-க்கள் தங்களுக்குள்ளே யோசித்து பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும் தமிழக நிதிநிலைமை குறித்து அரசு தான் தீர்மானம் செய்ய முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.