முதலமைச்சரை நீக்க ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி அவர்கள் கடிதம் அளித்தனர்.
அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்ற அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.
இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர். அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும், விரைவில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், தங்கள் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.