
திமுகவிற்கு எதிராக செயல்படும் அந்த உறவை செயல்தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஜெ.அன்பழகன், “ செயல் தலைவராக இருந்தாலும் கூட ஸ்டாலின் தலைவராக வரப் போகிறவர். திமுக தலைவர் கருணாநிதியாகத் தான் ஸ்டாலினை பார்க்கிறோம். கருணாநிதி விட்ட இடத்தில் இருந்து நீங்கள் தொடர வேண்டும். நிச்சயமாக தொடர்வீர்கள். உங்களுக்கு பின்னால் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும் ” என தெரிவித்தார்.
கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் இருப்பதாக கருணாநிதியின் மகனும், மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மு.க.அழகிரியை மறைமுகமாக சாடியே ஜெ.அன்பழகன் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.