கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா?: அமைச்சர்களுக்கு எம்எல்ஏ சவால்
சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றால், அவர்களால் அளிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
டிடிவி தினகரனுக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சரும், பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார், டிடிவி தினகரன் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறினார். சசிகலா, தினகரனை நம்பி தமிழக அரசு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதிமுக-வுக்கு பொதுச் செயலாளர் யார் என்பது குறித்த விவகாரம், தலைமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. எனவே பொதுச் செயலாளர் யார் என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது என பேசியிருந்தார்.
இந்நிலையில், டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாதான் அதிமுக-வின் அவைத் தலைவராக செங்கோட்டையனையும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனையும், மாநில மீனவர் அணி செயலாளராக ஜெயக்குமாரையும், மாவட்ட கழக செயலாளராக சி.வி.சண்முகத்தையும் நியமனம் செய்தார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்றால் அவர்களால் அளிக்கப்பட்ட கட்சி பதவிகள் மட்டும் எப்படி செல்லும்? கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா? தைரியம் இருந்தால் சசிகலாவால் அளிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

