திராவிடப் பல்கலையில் தமிழை காப்பாற்றுங்கள்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழியைக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தென்னக மொழிகளின் வளர்ச்சிக்கான மையமாக விளங்கும் திராவிடப் பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுவதற்கு அதிமுக அரசு துணைபோய் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் தினமணி நாளிதழ் மற்றும் நக்கீரன் இதழ் வெளியிட்ட கட்டுரையை சுட்டிக்காட்டியுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழியில் படிப்புகளை மேற்கொள்வோருக்கு ஆந்திரா உதவி செய்து வருவதாகவும், ஆனால் தமிழ் வழியில் உயர்கல்வி பயில்வோருக்கு தமிழக அரசு கல்விச் சலுகைகளை வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக அரசின் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பிற்கு நடைபாவை விரித்து வெண்சாமரம் வீசும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகள் மீது காட்டும் அக்கறையில் துளிகூட திராவிடப் பல்கலைக்கழகத்தின் மீது காட்டவில்லை என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக அரசின் அலட்சியப்போக்கால் மீண்டும் ஒரு மொழிப்போராட்டம் உருவாகும் சூழலை ஏற்படுத்திட வேண்டாம் என எச்சரித்துள்ள ஸ்டாலின், தமிழ் மொழியைக் காப்பாற்ற விரைந்து நிதியுதவி செய்ய வேண்டும் என ஆட்சியாளர்களை வலியுறுத்தியுள்ளார்.