“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை
அரிசி உற்பத்தி தொடர்பாக தமிழக அரசு உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும் இடையே பெருமளவு வேறுபாடுகள் இருப்பதை ஆங்கில நாளேடு தெளிவாக சுட்டிக் காட்டி இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பம்பர் அறுவடை நடந்ததாக அதிமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் புள்ளி விவரப்படி 2013-14 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன் என்றும், 2014-15 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன் என்றும் கூறியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் 2013-14 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்களாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 57.27 லட்சம் டன்களாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அதிமுக அரசு வழங்கிய புள்ளிவிவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எனவே, அரிசி உற்பத்தி தொடர்பாக முழு விவரங்கள் அடங்கிய உண்மையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.