தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் கருத்து

தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் கருத்து

தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் கருத்து
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பின் கருணாநிதியின் நினைவிடம் சென்ற அவர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார்.  ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர்
வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் திமுகவுடன் தோழமைக் கட்சிகளாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்டாலினின் கருத்தை ஏற்க தயக்கம் காட்டுகின்றன. தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மு.க.ஸ்டாலினின் கருத்து தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தாலும் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியிருப்பது அவருடைய சொந்த விருப்பம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திணிக்கப்பட்ட ஒன்று என பாரதிய ஜனதா கட்சியின் இல.கணேசனும், ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமர் ஆகமுடியாது என அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச்செல்வனும் தெரிவித்துள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தெரிவித்துள்ள ஸ்டாலினின் கருத்து தேசிய அரசியலில் ஒரு புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com