ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அத்துமீறல் மற்றும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆர்.கே இடைத்தேர்தலுக்காக நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தனக்கு நடைபெற்றது ஜனநாயக படுகொலை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “அத்துமீறல்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நடத்தும் அதிகாரி ஆளும் கட்சியினர் சொல்வதை தான் செய்வார் என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். ஆனால் என்ன அத்துமீறல்கள் நடைபெற்றாலும் தற்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். 7ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக மற்றும் கூட்டனிக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் மழை காரணமாக 11ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு திமுக பிரச்சாரத்தை தொடங்கும்” என்று தெரிவித்தார்.