மதிமுகவின் ஆதரவை வரவேற்கிறேன், மகிழ்ச்சியடைகிறேன்: மு.க.ஸ்டாலின்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்து மதிமுகவின் முடிவை வரவேற்பதாகவும், மகிழ்ச்சியடைவதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு எல்லா கட்சிகளும் ஒன்றிணையும் நேரத்தில், மதிமுகவும் அதில் தங்கள் பங்கை செலுத்த முன்வந்துள்ளது பாராட்டிற்குரிய ஒன்று. திமுகவிற்கு மதிமுக ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறேன், மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
கன்னியாகுமரி புயல் குறித்து பேசிய ஸ்டாலின், “ஒரு மாவட்டமே பாதிக்கப்படும் அளவிற்கு புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும் முதலமைச்சர் பழனிசாமி நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ஆடம்பர வளைவுகள், கட் அவுட்டுகள், பேனர்கள் வைத்து மக்களுடைய வரிப்பணத்தை வீணாக்கக்கூடிய வகையில், அரசு விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த விழாக்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அவர்கள் உடனடியாக செல்ல வேண்டும், நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இன்று நான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்கிறேன். அங்கு 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஆர்.கே நகரில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போமா என்பதை அந்த சமயத்தில் முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். விஷால் ஆர்.கே நகரில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, வாக்குரிமை பெற்றுள்ள யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்பதற்கு உரிமை உண்டு என்று கூறினார்.