நோயாளிகள் தடங்கலின்றி சிகிச்சை பெற நடவடிக்கை தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்
செவிலியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி நோயாளிகள் தடங்கலின்றி சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவிலியர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்த காரணத்தினால் அவர்கள் இரவு பகலாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவத் துறை என்பது அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருவதால் செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் திமுக-விற்கு மாற்றுக் கருத்து இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுகாதாரத் துறை அமைச்சர் பெயரளவுக்கு மட்டும்
சிலரோடு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை மிரட்டல் விடுத்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தது செவிலியர்களின் போராட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்துவிட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளின் நலன் காக்கும் சேவையில் ஈடுபடும் செவிலியர்களின் நலனைக் காக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டக் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்தித்து அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை சுமூகமுறையில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவசர சிகிச்சைக்கான மருந்துகள், குளூகோஸ் பாட்டில் போன்ற அத்தியாவசிய மருந்துகள் கூட பல அரசு மருத்துவமனைகளில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பல மருத்துவமனைகளில் துப்புரவுப் பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அவலநிலை நீடிக்காதபடி, செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு, நோயாளிகளுக்குத் தடங்கலின்றி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.