அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி நீக்கம் வெட்கக்கேடு: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டது வெட்கக்கேடானது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், அனைத்து துறைகளிலும் ஊழல் என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டு உண்மைதான் என அவர் மீண்டும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் ஊழல் குறித்து அமைச்சர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு தனது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி அழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் இதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி அழிக்கப்படவில்லையென்றும், பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக கூட தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.