செய்தியாளரிடம் வருத்தம் தெரிவித்த மு.க.ஸ்டாலின்..!
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தாக்கப்பட்டு கை முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் நேற்று தொடங்கினார். இதனிடையே காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மகேஷ் என்பவர் தாக்கப்பட்டார். கை முறிந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தியாளரை தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.
அப்போது, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க திமுகவினருக்கு அறிவுறுத்துங்கள் என்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் ஸ்டாலினிடம் அந்த செய்தியாளர் வலியுறுத்தியுள்ளார்.