எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் முதலமைச்சர்.... ஸ்டாலின் விமர்சனம்

எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் முதலமைச்சர்.... ஸ்டாலின் விமர்சனம்
எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் முதலமைச்சர்.... ஸ்டாலின் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது வகுப்புப்பதிவு செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து இரண்டு நாட்களாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் (Zero Hour) கேள்வி எழுப்பினேன். இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தத் தகவல் இன்னும் என் கவனத்திற்கு வரவில்லை என்று சொன்னார். ஆனால் தேர்தல் ஆணையம் 18.04.2017 அன்றே இந்த அறிக்கையை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆக இரண்டு மாதத்திற்கு முன்பே இந்த அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் முதலமைச்சர், எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று சொல்கிறார் என்று சொன்னால் இது ஒரு செயல்படாத ஆட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. மூன்று தேர்தல் ஆணையர்களின் உத்தரவின் பேரில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 21 இடங்களில் நடந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கமாக கிடைத்தது. மேலும், எந்தெந்த அமைச்சருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற புள்ளிவிவரங்கள் சுமார் 89 கோடி ரூபாய்க்கான விவரங்கள் அதில் இருந்தன. இதை அடிப்படையாக வைத்துதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171பி-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய 18.04.17 அன்றே மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கையின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியைதான் கேட்டேன்.

முதல்வர் ஒரே வரியில் “புலன்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று சொல்லி அமர்ந்து கொண்டார். என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்போது இந்த அறிக்கை வந்தது. எந்தத் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது? என்பதை முதலமைச்சர் சொல்லவில்லை. முதலமைச்சருடைய பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால்தான் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று ஸ்டாலின் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com