மெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் ! செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்

மெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் ! செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்
மெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் ! செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார்.

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். அவர் பேசும்போது,

“ கூட்டத்தில் பேசும் சூழலில் தான் இல்லை என பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார். கருணாநிதி இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை யாராலும் எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லோரும் தலைவரை இழந்துள்ளீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல.. தந்தையையும் இழந்து நிற்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய அன்பை பெற்று ஆதரவை பெற்று அவருடைய வாழ்த்துகளோடு செயல் தலைவராக நான் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு அழைத்து ஏறக்குறைய இரண்டு மூன்று மாதத்திற்கு ஆய்வு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக, புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்றவர்களுக்கு நான் சொல்லி அனுப்பியது, ‘அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றுபட்டு உழைத்து திமுகவிற்கு மிகப் பெரிய வெற்றியை உருவாக்கி மீண்டும் திமுகவின் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும். அந்த சாதனையை கருணாநிதியின் காலத்திலேயே அவருடைய காலடியில் ஒப்படைக்க வேண்டும்’ என்பதே. அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மண்டல கூட்டத்திலும் கூட, விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் என சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியை காப்பாற்ற முடியாமல் இன்று தவித்துக் கொண்டிருக்கேன்.

கருணாநிதியின் உடலை அண்ணாவின் உடல் அருகே அடக்கம் செய்ய நாம் எல்லோரும் முடிவெடுத்தோம். இது நம் முடிவல்ல. கருணாநிதியின் ஆசை. விருப்பம். ஆகவே இந்த ஆசையை நிறைவேற்ற நாம் எவ்வளவோ போராடினோம். கருணாநிதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எல்லோரும் எங்களிடத்தில் வந்து சொல்கிறார்கள். இவ்வளவு நேரம்தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது என சொல்கிறார்கள்.  இனி காப்பற்றவே வழியில்லை. முடிந்தவரை போராடியிருக்கிறோம் என சொன்னபோது நாங்கள் எல்லோரும் சோகத்தில் கண்ணீர்மல்க பேசிக்கொண்டிருந்தோம்.

எப்படி கருணாநிதியின் ஆசையை நிறைவேற்ற என யோசித்த போது பல நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்தியை சொல்லி அனுப்புகிறோம். ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் எல்லாம் கருணாநிதியின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் இருந்தது. நாமாக நேரடியாக முதலமைச்சரை சந்திப்போம். கோரிக்கையை வைக்கலாம் என அதற்கும் நான் தயாரானேன். முன்னோடிகள் எல்லோரும் சொன்னார்கள். நீ வர வேண்டாம். நாங்கள் போகிறோம். நீ செயல் தலைவர். தலைவருடைய மகன். நீ எக்காரணத்தை கொண்டும் அவர்களை சந்திக்க வரகூடாது என்றனர்.

அப்போது என் மானம், மரியாதை, கவுரவம் என எதுவானாலும் தலைவருக்காக இழக்கத் தயார் என சொல்லி சென்றே தீருவேன் என  முதலமைச்சரை சந்தித்தோம். எங்களுடையே கோரிக்கையை எடுத்துச் சொன்னோம். அப்போது, சட்டப்படியாக கருத்துகளை கேட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். வெட்கத்தை விட்டு சொல்கிறேன். முதலமைச்சர் கையை பிடித்து கெஞ்சி கேட்டேன். கருணாநிதியின் ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம். அதற்கு நீங்கள் துணை நில்லுங்கள் என கேட்டேன். அப்போது கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக பார்ப்போம் என்றார்கள். அதனை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.

மருத்துவமனையில் வந்து உட்கார்ந்தபோது சரியாக 6.10 மணியளவில் கருணாநிதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக ஒரு கடிதத்தை எழுதி அதனை முதலமைச்சர் வீட்டிற்கு அனுப்பினோம். அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அடுத்த 10-வது நிமிடத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டதாக துரைமுருகன் என்னிடம் தெரிவித்தார். எங்களால் என்ன செய்யவதென்று முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். வேறு இடம் ஒதுக்கப்படுவதாக செய்தி வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

நீதிமன்றத்திற்கு சென்றால் முடியுமா என வழக்கறிஞர் வில்சனிடம் கேட்டோம். உடனே அன்றிரவே நீதிமன்றத்திற்கு சென்றோம். மறுநாள் காலை 8.30 மணியளவில் தீர்ப்பு வரும் என காத்திருந்தோம். வில்சனின் தீவிர முயற்சியால் காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வந்தது. அண்ணாவின் சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு நீதிமன்ற உத்தரவு வந்தது. நாங்கள் உடலுக்கு பக்கத்தில் இருந்து அழுதுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு செய்தி வரும் முன்னே திரண்டிருந்த தொண்டர்களுக்கு செய்தி வந்தது. அப்போது அவர்கள் முழங்கினார்கள்.

என்னைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் குழுவிற்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும். வழக்கறிஞர்கள் அணிக்குதான் இந்த பெருமை சேரும். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்து பார்க்கிறேன். திமுகவிற்கு எத்தனையோ சோதனைகள் வந்துள்ளது. ஒருமுறை உதயசூரியன் சின்னத்திற்கு மிகப் பெரிய சோதனை வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தில் தீர்ப்பு சாதகமாக வந்தது. அந்த நேரத்தில்கருணாநிதி சொன்னார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவின் சமாதிக்கு பக்கத்திலே புதைக்கப்பட்டிருப்பேன். நீங்கள் எல்லோரும் எனக்கு மலர் வளையம் வைத்திருப்பீர்கள் என்றார். அதைத்தான் நான் அப்போது எண்ணிப் பார்த்தேன். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், கருணாநிதிக்கு பக்கத்தில் என்னை புதைக்கக்கூடிய சூழ்நிலை தான் உருவாகியிருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை வரவில்லை.கருணாநிதி மறைந்தும் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கருணாநிதியின் வழிநின்று இந்த இயக்கத்தை காப்போம். அதற்காக உறுதி எடுப்போம்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com