பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழா பணிகளை மேற்கொண்டவர்களுக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஏனென்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பா.ஜ.க. அரசை வீழ்த்தும் வலிமை கொண்டவர் ராகுல்காந்தி என்றும் பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ராகுல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தியை முன்னிறுத்துவதுதான் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்பிற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பது குறித்து தோழமை கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம் என்றும், ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியே விடிவுகள் பிறக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம், நாசக்கரத்தை வீழ்த்திட நேசக்கரங்களாய் இணைவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.