“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

“2016 தேர்தலில் பணத்தால் திமுகவின் வெற்றி பறிப்பு’’- அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

2016 சட்டமன்றத் தேர்தலின்போது 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அதிமுக வேட்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே அதிமுக லஞ்சம் கொடுத்து கொள்முதல் செய்த அதிர்ச்சித் தகவல்களை "தி வீக்" ஆங்கில இதழ் வெளியிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர், எஸ்.ஆர்.எஸ். மைனிங் எனும் கம்பெனி மூலம் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை விநியோகித்ததற்கான ஆதாரங்கள் வருமானவரித் துறையிடம் கிடைத்திருப்பதாக வீக் இதழ் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஆதாரங்களில், சட்டமன்றத் தொகுதியின் பெயர்கள், வாக்குச்சாவடி, வாக்காளர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், குறித்து வைத்திருந்த கணக்கு புத்தகங்கள், ரகசிய பண விநியோகப் பட்டியல் என அனைத்தும் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். நடிகர் சரத்குமாருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தது குறித்து கையெழுத்துடனான ஆதாரம் வருமான வரித்துறையிடம் பிடிபட்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 2017-ஆம் ஆண்டு மே மாதமே அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். பிடிபட்ட ஆதாரங்கள் எங்கே என்றும், அதன் மீது வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பிடிபட்டது, கரூர் அன்புநாதன் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து நடந்த வருமானவரித்துறை சோதனை போன்றவற்றின் மூலம் அதிமுகவை பாஜக மிரட்டி கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரின் மீதும் தேர்தல் ஆணையம் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com