“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்

“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்

“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்
Published on

மேகதாது பிரச்னையில் அரசியல் காரணங்களுக்காக கர்நாடகாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரைக் குறைக்கும் விதத்தில் எந்த அணைகளையும் கர்நாடக மாநில அரசு கட்டக் கூடாது என்று கூறியிருந்த போதிலும், "மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று தொடர்ந்து கர்நாடக அரசு, மனிதாபிமானம் சிறிதும் இன்றி வேண்டுமென்றே அடம் பிடித்து வருவதும், அதற்குத் திரைமறைவில் மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக ஆதரவுக் கரம் நீட்டி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தபோது தமிழகம் கடுமையாக எதிர்த்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு நிதின்கட்கரி அவர்களே "தமிழகத்தின் கருத்துக்களைக் கேட்காமல், காவிரி நதி நீர் பாயும் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தாமல், மேகதாது அணை கட்ட அனுமதிக்கப்பட மாட்டாது" என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதுமட்டுமன்றி "புதிய அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவெடுக்கும்" என்றும் அறிவித்திருந்தார். 

ஆனால் இதையெல்லாம் ஒதுக்கிவைத்து அலட்சியப் படுத்திவிட்டு,  கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா "மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரத் தயார்" என்று தன்னிச்சையாகப் பேட்டி கொடுத்து அவர் அனைத்து மாநிலங்களுக்குமான அமைச்சர் அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்நிலையில் கர்நாடக அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோதச் செயலாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. ஆகவே  தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மேகதாது அணை பிரச்சினையில் இப்போதும் மெத்தனமாக இருக்காமல் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தாமதமின்றி தடை உத்தரவினை பெற்றிட வேண்டும்.

காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல.தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சியாகும். ஆகவே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், மத்தியில் உள்ள பாஜக அரசு கர்நாடக அரசின் கடிதத்தை நிராகரித்து, "மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது" என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரைக்கூட திறந்து விடாமல், புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று ஒரு அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல். காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசு,  இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் இத்தகைய முரண்பட்ட செயல்களையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com