“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” - ஸ்டாலின் சவால்

“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” - ஸ்டாலின் சவால்
“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” - ஸ்டாலின் சவால்

பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை உடனடியாக விடுவிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றார். அப்போது அவரது அருகில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் தனது பெற்றேருடன் சென்றுகொண்டிருந்தார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்த இவர், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்புறம் அமர்ந்துகொண்டு பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகத் தெரிகிறது. 

விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமானநிலையத்திலும் பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டதால் அவர் மீது அங்கிருக்கும் காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அப்பெண் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “உயிருக்கு ஆபத்தான நிலை இருந்தது. ஏதேனும் ஒரு அமைப்பு பின்புலமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். ஸ்டாலின் தனது ட்விட்டரில், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!. அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?. நானும் சொல்கின்றேன்! பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com