சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சென்னை உள்பட பல இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடைய சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை எதிரே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வாலாஜபாத் சாலை வழியாக பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். ஆனால் அவர்களை தடுப்புகளை மீறியும் பேரணியை தொடர்ந்தனர்.
தொடர்ந்து பேரணியாக சென்றவர்கள் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினர். திருமாவளவன், திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் ஏராளமான தொண்டர்கள் இன்னும் உழைப்பாளர் சிலை அருகே குவிந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.