இருண்ட பக்கத்தை உருவாக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் சாடல்
தமிழ்நாட்டின் தொழிற்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக ஆட்சி உருவாக்கி விட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால், தொழில் தொடங்குவதற்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருக்கிறது என மத்திய அரசின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இது அதிமுக அரசின் நிர்வாக அவலட்சணத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு முதலீட்டைக்கூட 2017-ம் ஆண்டில் பெறமுடியாமல் போனதாகவும், அதனால் தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும், மாநில முன்னேற்றமும் அதிமுக ஆட்சியில் பெருமளவு கேள்விக்குறியாகி இருப்பது கவலையளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பலவீனமான அரசாக இருப்பதால் முதலீட்டாளர்களை தமிழக அரசால் கவர முடியவில்லை என அசோசெம் பொதுச்செயலர் கூறியிருப்பது, தமிழகத்தின் தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது நிரூபணமாகி விட்டதாகக் கூறியுள்ளார். எனவே, மற்றொரு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்கு முன்பு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து, தொழிற்துறையில் தமிழகம் பின்தங்கியிருப்பதை மாற்ற வேண்டுமெனக் கோரியுள்ளார். இதைச் செய்ய முடியாவிட்டால் இந்த ஆட்சி தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.