3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில்: அமைச்சர் காமராஜ் பேட்டி
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்திலுள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொருட்கள் சரிவர விநியோகிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், அந்தந்த மாதத்திற்குத் தேவையான பொருட்கள் கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்றும் அந்தப் பொருட்கள் சரிவர மக்களுக்கு வழங்கப்படுகிறதா எனக் கண்காணிக்கபடுவதாகவும் கூறினார்.
இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் கூறினார். பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.