செய்தியாளரை சகோதரியாக பார்க்கிறேன்: விஜயபாஸ்கரின் விளக்கம்
‘அழகாயிருக்கீங்க’ என நேற்று பெண் செய்தியாளரை பார்த்து கூறியதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம், கூட்டத்தில் புதிய தலைமுறையின் பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல், “நீங்கள் ரொம்ப அழகாயிருக்கீங்க. நீங்கள் அணிந்துள்ள கண்ணாடி ரொம்ப அழகாக உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மூத்த தலைவர்கள் உள்ளனர். ‘நீங்க அழகாயிருக்கீங்க’ ‘அழகாயிருக்கீங்க’ ‘அழகாயிருக்கீங்க’ என்று விஜயபாஸ்கர் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய பேச்சுக்கு விளக்கம் அளிப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர, சகோதரியாகவே நான் பார்க்கிறேன். அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.