“கமல்ஹாசனின் கைகள் சுத்தமாக இருக்கிறதா?” - ராஜேந்திர பாலாஜி கேள்வி
‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசனின் கைகள் சுத்தமாக இருக்கிறதா எனப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. இதில் அதிமுகவுடன் பாஜக இணையும் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் திமுக காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இதனிடையே தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் பேசிய ஒரு பேட்டியில், “எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்போது நாங்கள் யாருடன் கை கோர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். எங்கள் கை கறை படிந்து விடக்கூடாது என்பதற்காக தனித்து போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், விருதுநகர் சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “கமல் கட்சிக்கு யாரும் கூட்டணிக்கு வராததால்தான் பிற கட்சிகளை கறைபடிந்த கட்சிகள் எனக் குற்றம் சாட்டுகிறார். கமல்ஹாசனின் கைகள் சுத்தமாக இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதேபோல் தூத்துக்குடி கோவில்பட்டி அடுத்த கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிவின் மூலம் யார் நாட்டை விட்டு வெளியே செல்வது என மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள். ‘விஸ்வரூபம்’ படப்பிரச்னையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கமல் கூறினார். திராவிட இயக்கங்களை பற்றி கருத்து கூற கமலுக்கு எந்தத் தகுதியும் இல்லை” எனத் தெரிவித்தார்.