மோடியின் திட்டம் புயல் வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது: செல்லூர் ராஜூ
பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டம் தமிழகத்தில் புயல் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சுகாதார பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தூய்மை பணிகள் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்தி நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டம் தமிழகத்தில் புயல் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திர மோடி, நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தூய்மையே சேவை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. தூய்மையே சேவை பிரசார இயக்கத்தில் இணைந்து செயலாற்றுமாறு பல்வேறு துறை பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார் உள்ளிட்டோரும் தூய்மையே சேவை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.