தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருப்பதாகவும் இதில் இந்தி மொழியை சேர்க்க வேண்டிய நிலை வந்தால் அதை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடுவார் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. நேரு கொண்டுவந்த இருமொழிக்கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு. அண்ணாவின் கொள்கைதான் எங்களின் நிலைப்பாடு. அதை தமிழக அரசு விளக்கம் கொடுத்துவிட்டது. இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது. 

இந்தியை படிக்கலாமே ஒழிய இந்தியை திணிக்க முடியாது. மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தி மொழியை சேர்க்க வேண்டிய நிலை வந்தால் அதை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடுவார்” எனத் தெரிவித்தார். . 

மேலும், “அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாகத்தான் திட்டங்களை தீட்டுகின்றனர். நிர்வாகிகளை நியமிப்பதிலும் இணைந்தே செயல்படுகின்றர். ஒரு சில காரணங்களுக்காக ஒரு மத்திய அமைச்சர் பதவியை தருவதாக தெரிவித்தார்கள். ஆனால் அதிமுக சார்பில் இரண்டு மூன்று இடங்கள் கேட்கப்பட்டது. அதனால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை. எங்களுக்கு கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசும் நினைக்கவில்லை.  வாங்கக்கூடாது என்று நாங்களும் நினைக்கவில்லை. ஈபிஎஸ் ஒபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதி முடிவு. அதை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com