கமலுக்கு சகுனம் சரியில்லை: ராஜேந்திர பாலாஜி சரமாரி விமர்சனம்!

கமலுக்கு சகுனம் சரியில்லை: ராஜேந்திர பாலாஜி சரமாரி விமர்சனம்!
கமலுக்கு சகுனம் சரியில்லை: ராஜேந்திர பாலாஜி சரமாரி விமர்சனம்!

நடிகர் கமல் மற்ற கட்சியினரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்வது கேலிக் கூத்தாக முடியும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

அரசியல் களத்தின் உச்சியில் நின்று நாளை கட்சிக்குள் குதிக்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இவர் அதிமுக மீது முதன்முதலாக வைத்த விமர்சனத்திற்குப் பிறகு, இவருக்கு அதிமுகவினருக்கும் இடையே கருத்துப் போர் வெடிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ட்விட்டரில் கருத்து மழை பொழிய ஆரம்பித்த கமல்ஹாசன், அதன் தொடர்ச்சியாக தான் அரசியலுக்கு வருவதையும் உறுதிச் செய்தார். இதற்கிடையே நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் கமல்ஹாசன் அமர்ந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாடல் மூலம் கமல் மற்றும் ரஜினியை விமர்சித்தார். இதற்கிடையே ஓகி புயலின்போது படப்பிடிப்பில் பிசியான கமல், பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு மீண்டும் ட்வீட் போரை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அரசியல் பயண அறிவிப்பு மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கலக பேச்சு என அரசியலுக்கு அருகில் வந்த கமல், நாளை முதல் தனது ‘நாளை நமதே’ அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அத்துடன் மாலை மதுரையில் நடைபெறவுள்ள முதல் மாநாட்டில் கட்சிக்கொடியேற்றி, கொள்கைகளையும் விளக்குகிறார். இதற்காக அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்று வருகிறார். 

இந்நிலையில் கமலின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கட்சி ஆரம்பிக்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லாமல் இருக்கிறது. கமல்ஹாசன் கட்சி நடத்துபவர்களிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். கட்சி நடத்துபவர்களிடமே ஆதரவு கோருவது தமிழக அரசியல் வரலாற்றிலேயே நடைமுறைக்கு அப்பார்பட்டதாகவும், புதிதாகவும் உள்ளது. கமல்ஹாசனின் இந்த செயல் கேலிக்கூத்தாக முடியுமே தவிர, அரசியல் விஸ்வரூபமாக மாறாது. அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போனை யாரும் திருடியிருக்க முடியாது. தவறி கீழே விழுந்திருக்கும். எத்தனை கமல்ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. ரஜினிகாந்த் தற்போதைய சூழ்நிலையையும், அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத் தன்மை கொண்டவர் என்பதால் தான் கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கமலை வாழ்த்தியிருக்கிறார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com