”பாஜக கள்ள பணம் போன்றது; சந்தைக்கும் உதவாது; கையில் வைத்திருந்தாலும் ஆபத்து”- மனோ தங்கராஜ்
’’பாஜக கள்ள பணம் போன்றது. பளபளப்பாக இருக்கும். ஆனால் அது சந்தைக்கும் ஆகாது; கையில் வைத்திருந்தாலும் ஆபத்து’’ என கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ’’திமுகவின் வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் 600 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் செய்துள்ளோம். இதேபோன்று வளர்ச்சி பணிகள் தொடரும் என மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளன. பொன். ராதாகிருஷ்ணன் நினைப்பது போன்று எப்போதும் நடக்காது. திமுகவில் உள்ள சில பிரச்னைகளை அவர்கள் சாதமாக மாற்ற முயல்கிறார்கள். ஆனால் இந்தமுறை திமுக ஆதரவு அலை வீசுகிறது. எனவே குமரியில் அவர்கள் முயற்சி பலனளிக்காது.
பாஜக கள்ள பணம் போன்றது. பளபளப்பாக இருக்கும். ஆனால் அது சந்தைக்கும் ஆகாது; கையில் வைத்திருந்தாலும் ஆபத்து. யாரும் பாஜக, அதிமுகவிற்கு ஓட்டு போடமாட்டார்கள். அவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர். திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது. மக்கள் விழிப்புடன் உள்ளனர்’’ என அவர் தெரிவித்தார்.