ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடங்கும்: கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதற்கான அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றார். அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செங்கல்பட்டு, பெருந்துறை, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். இறுதியாக தஞ்சையா அல்லது மதுரையா என்ற போட்டி ஏற்பட்டு, இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் இரத்த பரிசோதனை ஆய்வு மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கு தேவையான அனுமதி மத்திய அரசிடமிருந்து கிடைத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.