“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்

“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்

“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்
Published on

ஜெயலலிதா உணவு செலவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்தை வரவேற்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை நாட்களில் உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை என மருத்துவர்களே சொன்னார்கள். அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமா? இல்லையா? 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என 3 மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது யார்? தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன? அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்யக் கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என நினைத்தது யார்? ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் உயிரை விட, இந்திய மருத்துவர்களின் கவுரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும். தற்போது அப்போலோ மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்ட செலவுக்கணக்கில் இட்லி சாப்பிட்டோம், தோசை சாப்பிட்டோம் என ரூ.1.17 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
 

ஜெயலலிதாவே சாப்பிட்டாரா?அம்பானி அல்லது டாட்டாவாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடன் ஒருவர் தங்கியிருப்பார். மற்றவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். ஆனால் அப்போலோவில் ஒரு குடும்பமே தங்கியிருந்துள்ளது. அதுவும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம் அது. அந்தக் குடும்பம் மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றியுள்ளது. அந்தக் குடும்பத்தின் நோக்கம் என்ன? இங்கே தான் மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த மர்மம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “அமைச்சர் என்ற அடிப்படையில் சி.வி.சண்முகம் கருத்து சொல்கிறார். விசாரணை ஆணையம் அவரின் கருத்தையும் கருத்தில் கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு ஏதும் கிடையாது. திசைதிருப்ப வேண்டிய அவசியம் சண்முகத்திற்கும் அரசுக்கும் கிடையாது. 

சசிகலா குடும்பம் ரூம்கள் எடுத்து தங்கி அவர்கள் சாப்பிட்டதுதான்  ஒரு கோடி. அம்மா சாப்பிட்டது கிடையாது. மருத்துவமனையை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளது சசிகலா குடும்பம். இதைத்தான் சி.வி.சண்முகம் சொல்லியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன நினைத்து கருத்து தெரிவித்தாரோ தெரியவில்லை. அமைச்சர்கள் யாரும் மருத்துவமனையில் தங்கவில்லை. எந்த மாவட்ட செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளரும் தங்கவில்லை. எந்த எம்.எல்.ஏவும் தங்கவில்லை. அப்போலோவில் சசிகலா குடும்பத்தினர் பல அறைகள் எடுத்து சாப்பிட்டதுதான் 1.17 கோடி ரூபாய் பில் ஆனது. சி.வி சண்முகம் சொன்னது தவறு கிடையாது. அதுகுறித்து அரசு முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com