ஆடிட்டர் குரூமூர்த்தியின் விளக்கத்திற்கு ஜெயக்குமார் பதிலடி

ஆடிட்டர் குரூமூர்த்தியின் விளக்கத்திற்கு ஜெயக்குமார் பதிலடி

ஆடிட்டர் குரூமூர்த்தியின் விளக்கத்திற்கு ஜெயக்குமார் பதிலடி
Published on

தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்விட்டர் பதிவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளையடுத்து தினகரன் ஆதரவாளர்களை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காலம் கடந்தது என விமர்சித்திருந்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவர் தொடர்பாக, கடுமையான சொல் ஒன்றை பயன்படுத்தியும் குருமூர்த்தி பதிவிட்டிருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்தை வெளிப்படுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்த குருமூர்த்தி, தனது அறிவுரையை கேட்டுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது என்ற தவறான தோற்றத்திற்கு, அமைச்சர் ஜெயக்குமார் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கூறினார். சுதந்திரமான எழுத்தாளனாக தமது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் நாகரிகமான போக்குவர வேண்டும். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யக்கூடாது. ஆடிட்டர் குருமூர்த்தி பத்திரிகையாளராக இருப்பதால் பண்பாளராக இருப்பார் என்றே நினைக்கிறேன். அதனால் அவரை மதிக்கிறேன். உண்மையான பண்பாளர் என்றால் வார்த்தையை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். புறம்போக்கு நிலம் என்பதில் ‘புறம்போக்கு’ என தனியாக குறிப்பிட்டால் கோபம் வருமா வராதா? ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக்கியது அதிமுக. இதுபோன்ற குழந்தைத்தனமான விளையாட்டிற்கு நாங்கள் அஞ்சுபவர்கள் கிடையாது. இவர்களை பெரிய அளவிற்கு பொருட்படுத்தவில்லை. இது ஆண்மை உள்ளவர்களின் கருத்து. பொதுவாகவே ஒரு பெருந்தன்மை வேண்டும். அந்த தன்மை எங்களுக்கு இருக்கிறது. நூறாண்டு காலம் தமிழ்நாட்டை ஆளப்போவது அதிமுக. இனிமேல் தமிழ்நாட்டில் திமுகவால் ஜெயிக்க முடியாது என ஸ்டாலினின் சொந்த சகோதரரான மு.க.அழகிரியே சொல்லியிருக்கிறார். அவரே சிறந்த சான்றிதழ் வழங்கியுள்ளார்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com