நடராஜனைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை ஜெயலலிதாவிற்கு ஏன் செய்யவில்லை?: ஜெயக்குமார் கேள்வி
நடராஜனைக் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை ஜெயலலிதாவிற்கு ஏன் செய்யவில்லை என சசிகலா குடும்பத்தினருக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "ஜெயலலிதா 78 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். இன்று நடராஜனுக்காக ஆடும் அந்த தசை, அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கின்ற போது ஆடியிருக்க வேண்டும். நடராஜனை காப்பாற்ற எல்லா வகையான முயற்சியையும் செய்கிறார்கள். அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அந்த தசை ஏன் ஆடவில்லை? என தமிழக மக்கள் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்தது தெரியவந்தது. எனவே அவருக்கு மாற்று சிறுநீரகம், கல்லீரல் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். இதையடுத்து விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் ஒருவரின் சிறுநீரகம், கல்லீரல் தானமாக பெறப்பட்டு நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் நடராஜனைப் பார்க்க சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.