“படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பீர்களா?” - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

“படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பீர்களா?” - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

“படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பீர்களா?” - அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
Published on

அரசின் இலவசத் திட்டங்களை குறைக்கூறும் திரைத்துறையினர், திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பார்களா என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த படம் 'சர்கார்'. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு, நீதிமன்றத்தில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதால், பிரச்னை முடிவுக்கு வந்து படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது.

படம் வெளியானதும், ஒரு விரல் புரட்சி எனும் பாடலில் அரசின் விலையில்லா பொருட்களை தீயிடும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினர். தமிழகத்தின் பல பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களைக் கிழித்தும், திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதிமுகவினரின் போராட்டங்களைத் தொடர்ந்து, படக்குழு சர்கார் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது. அதனைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் எனும் கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகளை படத்தில் வைத்தது தனது கருத்து சுதந்திரம் எனவும், அதனால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் தனது திரைப்படங்களில் அரசை விமர்சிக்கும் காட்சிகளை வைக்க மாட்டேன் எனும் உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ள கருத்து குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ‌அமைச்சர் சி.வி.சண்முகம், பல கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் திரைத்துறையினர், தங்களின் திரைப்படங்களுக்கு அரசிடம் வரிவிலக்கு தருமாறு கேட்க மாட்டோம் என கூறுவார்களா என கேள்வி எழுப்பினார். 

ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை‌த் தரத்தை உயர்த்தவே விலையில்லா திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக, திரைத்துறையினர் தங்களை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார். இலவச திட்டங்கள் வேண்டாம் என கூறுபவர்கள், தங்களின் படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் என சொல்லிவிட்டு, பிறகு தங்கள் படங்களை வெளியிடட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com