புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின்

புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின்
புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அதிமுக அரசு கைவிடாவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவுடன் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளை புதிதாய் திறக்க அதிமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை ‘மணல் மாஃபியாக்கள்’ சூறையாடி, நிலத்தடி நீருக்குக் கேடு விளைவித்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், கிராம மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் பொதுப்பணித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக மணல் படுபாதாளம் வரை தோண்டியெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 5.5.2017 அன்று “மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும்” என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அரசு உருவாக்குவதாகக் கூறிய மணல் விற்பனை நிலையம் முழு வீச்சில் செயல்படாமல் வேண்டுமென்றே முடக்கப்பட்டு, செயற்கை மணல் பயன்படுத்துவதற்கும் போதிய ஊக்கமளிக்காமல், வெளிநாட்டு மணலையும் விற்கவிடாமல், ஒரு செயற்கையான விலை ஏற்றத்திற்கு வித்திட்டுள்ள அதிமுக அரசு இப்போது மணல் விலையை கட்டுப்படுத்த, 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது நிச்சயமாக தொலை நோக்குப் பார்வையில் மக்களின் சிரமங்களை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கை அல்ல என்பதும் இது முழுக்க முழுக்க சுத்த சுயநோக்குப் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு என்றும் தெளிவாகிறது.

தமிழகத்தைச் சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக கட்டுமானத் தொழில்களை முடக்கும் விதத்தில் மணல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கிய அதிமுக அரசு ‘கிராவல் மண்’ எடுக்க அனுமதி வழங்கிய கையோடு, 70 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை எடுத்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புதிய மணல் குவாரிகளை திறப்பதில் திடீர் ஆர்வம் காட்டுவது முழுக்க முழுக்க முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சுற்றுப் புறச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பேராபத்தாக முடியும். தமிழக நலன் கருதி புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் திமுக சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com