MI vs DC : 137 ரன்களுக்கு சுருண்டது மும்பை: மேஜிக் காட்டிய டெல்லி அணியின் மிஸ்ரா!

MI vs DC : 137 ரன்களுக்கு சுருண்டது மும்பை: மேஜிக் காட்டிய டெல்லி அணியின் மிஸ்ரா!
MI vs DC : 137 ரன்களுக்கு சுருண்டது மும்பை: மேஜிக் காட்டிய டெல்லி அணியின் மிஸ்ரா!

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 13வது  லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. 

மும்பை அணிக்காக ரோகித் மற்றும் டி காக் இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். ஸ்டாய்னிஸ் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் டி காக் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ், ரோகித்துடன் சேர்ந்து 58 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார். இருந்தும் ஆவேஷ் கானிடம் தனது விக்கெட்டை அவர் பறிகொடுத்தார். அடுத்த சில பந்துகளில் ரோகித்தும் 44 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ரா சுழலில் சிக்கினார். 

அடுத்த 8 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. ஹர்திக், குர்ணால், பொல்லார்ட் என பவர் ஹிட்டர்கள் மூவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மிஸ்ரா, ஹர்திக் மற்றும் பொல்லார்டை வீழ்த்தினார். லலித் யாதவ், குர்ணாலை அவுட் செய்தார். அதனால் மும்பை அணி 11.5 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

இருப்பினும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை இஷான் கிஷன் மற்றும் ஜெயந்த் யாதவ் கையாண்டனர். அதன் பலனாக இருவரும் 39 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 26 ரன்களை எடுத்து மிஸ்ரா சுழலில் கிளீன் போல்ட் ஆனார் இஷான் கிஷன். ஜெயந்த் யாதவும் 23 ரன்களில் ரபாடா வேகத்தில் வீழ்ந்தார். ராகுல் சாஹரும் 6 ரன்கள் எடுத்து ஆவேஷ் பந்து வீச்சில் சிக்கினார். மொத்தமாக 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை மட்டுமே மும்பை அடித்திருந்தது. டெல்லி அணிக்காக மிஸ்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 138 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம். சென்னை மைதானம் இரண்டாவதாக பேட் செய்யும் அணிகள் ரன் குவிக்க ஒத்துழைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com