எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதலமைச்சர்
கடலூரில் இன்று நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், 310 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அங்கு புகைப்படக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிது. இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவர் தனபால், செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுக தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
விழாவில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். மேலும், 260 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்மூலம் 7 லட்சம் பேர் பயனடைவர் என்றும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 55 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.