ஒரு சோகம் மறையும் முன்னரே அடுத்த மரணம்: கனிமொழி வேதனை
திருப்பூர் மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்த சோகம் மறையும் முன்பே சரத் பாபுவின் மரணம் நிகழ்ந்துள்ளதாக திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் படித்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு இன்று உயிரிழந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சரத் பிரவுவின் மரணத்திற்கு திமுக எம்.பி.கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சரத் பிரவுவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். கோவையில் இளங்கலை மருத்துவபடிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சரத் பிரவுவின் மரணம் அவரது குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
“ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்துக் கொண்டிருந்த திருப்பூர் மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அந்தச் சோகம் மறையும் முன்பே சரத் பாபுவின் மரணம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் மாரிராஜ் சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்கும் கடமை மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு. அரசுகள் கடமையில் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் கனிமொழி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

