'மஞ்ஞுமல் பாய்ஸ்' படம் எதிரொலி! கிளம்பும் புது சர்ச்சை.. தமிழக போலீசாருக்கு வைக்கப்பட்ட செக்! ஆனால்?

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட போலிசாரின் மீது வழக்கு பதிவு செய்ய சிலர் மஞ்ஞுமல் பாய்ஸை வற்புறுத்தி வருகின்றனர் என்பதே தற்போதைய சர்ச்சைக்கு காரணம்!
மஞ்சுமள் பாய்ஸ்
மஞ்சுமள் பாய்ஸ்கூகுள்

சமீபத்தில் மளையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வசூலை குவித்த மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம், சுமார் 200 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறது. அது ஏன்? என்ன காரணம்? முழுமையாக பார்ப்போம்...

இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

உண்மை சம்பவம் என்ன?

2006ம் ஆண்டு கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு வந்த இளைஞர்களில், ஒருவர் தவறுதலாக குணா குகைப் பள்ளத்தில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக, நண்பர்களில் சிலர் உதவிக்கு கொடைக்கானல் காவல் நிலையத்தை நாடி இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவர்களை கொடூரமாக தாக்கி, மனரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. பின் காவல்துறை உதவியுடன் குகைக்குள் விழுந்த நண்பனை, அவர்களில் ஒருவரே மீட்டிருந்தார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அப்படியே படத்திலும் காட்டப்பட்டிருக்கும்.

மஞ்சுமள் பாய்ஸ்
கேரளா|வெளிநாடு செல்லும் குஷியில் செல்போன் பேசிக்கொண்டே அரளிப்பூவை சாப்பிட்ட செவிலியர்! பறிபோன உயிர்!

தற்போது வந்த சிக்கல் என்ன?

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட போலிசாரின் மீது வழக்கு பதிவு செய்ய சிலர் மஞ்ஞுமல் பாய்ஸை வற்புறுத்தி வருகின்றனர் என்பதே தற்போதைய சர்ச்சைக்கு காரணம்!

உண்மை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிஜூ டேவிட் (படத்தில் குகைக்குள் இறங்கும் குட்டன் கதாபாத்திரம்) இது பற்றி கூறும் பொழுது, “அன்று எங்களுடன் இருந்தவர்களை போலீஸார் துன்புறுத்தியது உண்மைதான். ஸ்டேஷனுக்கு சென்ற என் நண்பர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது படம் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட போலீஸ், வனக் காவலர் முதலியோர் வந்து அன்றைய சம்பவத்துக்கு எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். இதுபோன்று பல கொலைகள் அங்கு நடந்துள்ளதாகவும், அதனால் இதுவும் அதுபோன்ற ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்று நினைத்து எங்கள் நண்பர்கள் குழுவை தாக்கியதாகவும் அவர்கள் கூறினார். வருடங்கள் ஓடிவிட்டன... இப்போது அவர்கள் எல்லோரும் வயதானவர்கள்... இனிமேல் வழக்குப்பதிவு செய்து யாரையும் தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்றுள்ளார்.

நிஜ லைஃப் குட்டன் - சுபாஷ் (குகைக்குள் விழுந்தவரும், அவரை காப்பாற்றியவரும்)
நிஜ லைஃப் குட்டன் - சுபாஷ் (குகைக்குள் விழுந்தவரும், அவரை காப்பாற்றியவரும்)

இருப்பினும் இதுதொடர்பாக மலையாள சமூக ஆர்வலர் ஷாஜு ஆப்ரஹாம் என்பவர் புகார் அளித்திருக்கிறார். ஆகவே அதன்கீழ் அன்று நடந்தது என்ன என்பதுகுறித்து விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் இந்த உத்தரவை தமிழ்நாடு டிஜிபி-க்கு பிறப்பித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து புகாரளித்த ஆப்ரஹாம், மலையாள ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் படக்குழுவினர் தங்கள் பேட்டிகளில் ‘உண்மையில் நடந்த சம்பவத்தில் 10% கூட படத்தில் காட்டப்படவில்லை’ என தெரிவித்துள்ளனர். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது காவல்துறையின் கடமை. இது அவர்களுக்கு புரியவில்லை என்றால் சமுதாயம் புரிய வைக்கும். அதற்காகவே நான் புகாரளித்தேன்.

இச்சம்பவத்தில் நிஜத்தில் பாதுக்கப்பட்டவர்கள், அன்றைய தினம் எந்த புகாரும் அளிக்கவில்லை. காரணம் அன்று அவர்கள் மிகவும் பயந்து இருந்தனர். இப்போது அவர்கள் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். சம்பந்தப்பட்ட சிஜு டேவிட் (படத்தில் குட்டன்) என்னிடம் பேசியபோது, தங்களுக்கு எந்த புகாரும் இல்லை என்று கூறினார். நான் அவர்களுக்காக இந்தப் புகாரை அளிக்கவில்லை. உண்மையில் நான் ஒரு மலையாளி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர்.

அதனால் இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது என்றெண்ணி இப்புகாரை அளித்தேன். யாரொருவர் ஆபத்தில் இருக்கும் போது போலீசார் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும்போது அதைவிட அதிகமான சித்திரவதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாக்கப்படக் கூடாது. அவர்கள் நட்பாக, உதவிகரமாக இருக்க வேண்டும். 'மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழுவினரிடம் சம்பந்தப்பட்ட போலீசார் மன்னிப்பு கேட்டுள்ளனர்தான். ஆனால் அதுவும் படம் வந்தபின்னரே நடந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து புகாரை தொடர விரும்பவில்லை என்று அவர்கள் (சம்பந்தப்பட்டவர்கள்) கூறுகின்றனர். என்னை பொறுத்தவரை, நான் புகார் கொடுப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com