UK HEATWAVE: இரவுநேர சொகுசு ட்ரெயினில் தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன நடந்தது?

UK HEATWAVE: இரவுநேர சொகுசு ட்ரெயினில் தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன நடந்தது?

UK HEATWAVE: இரவுநேர சொகுசு ட்ரெயினில் தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன நடந்தது?
Published on

இங்கிலாந்தின் கலிடோனியன் ஸ்லீப்பர் ரயில் பயணிகளின் பிடித்தமான சேவையாக இருந்து வருகிறது. ஏனெனில் ஒரு நாள் இரவு பயணிப்போருக்கென தனியாக படுக்கை வசதி, காலையில் சேரும் இடத்தை அடைவதற்கு முன்பு டீ, காஃபி உட்பட பிரேக்ஃபாஸ்ட் கொடுத்து உபசரிப்பது போன்றவை அந்த ரயில் சேவையின் சிறப்பாக இருந்திருக்கிறது.

ஆனால் இந்த கலிடோனியன் ஸ்லீப்பர் ரயில் சேவையில் இதுவரை கண்டிராத விநோதாமான நிகழ்வு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்திருப்பதாக ஜிம் மெட்கால்ஃபே என்ற பயணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அது என்னவெனில், ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு செல்ல காலீடோனியன் ஸ்லீப்பர் ரயில்இல் ஜிம் ஏறியிருக்கிறார். ஆனால் அவர் காலை எழுந்து பார்த்தபோது ரயில் அவர் செல்லவேண்டிய நிலையத்தை அடையாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

இதுதொடர்பான அவரது ட்வீட்டில், 15 ஆண்டுகளாக இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறேன். பல விதமான விநோதமான திருப்பங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இது ரொம்பவே விசித்திரமாக இருக்கிறது. நான் எழுந்து பார்த்தபோது ட்ரெயின் கிளாஸ்கோவை விட்டே நகரவில்லை என்பதை உணர்ந்தேன்.

இது இரவு முழுவதும் அதே இடத்திலேயே இருந்திருக்கிறது. தற்போது காலை 5.30 மணியளவில் வேறொரு இடத்தில் இறக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக செல்கிறேன். ஆனால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் காலீடோனியன் ஸ்லீப்பர் ரயில் நிர்வாகம் எங்களை ட்ரெயினில் ஏறி தூங்கும்படி கூறியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே BBC-க்கு ஜிம் அளித்துள்ள பேட்டியில் “ட்ரெயின் கிளம்பும் முன் என்னால் தூங்க முடியவில்லை. அதனால் 10.30க்கு ஏறிய பிறகு 11 மணி வாக்கில்தான் தூங்கினேன். காலை 5 மணியளவில் என் இருக்கை முன் வந்த ஒரு நபர், காஃபி மற்றும் உணவுடன் வந்து என்னை எழுப்பியதோடு ட்ரெயின் கிளம்பவே இல்லை எனக் கூறினார். மேலும் எங்களிடம் ட்ரெயினை விட்டு வெளியேறும்படி கூறினார்கள். இது எல்லாவற்றையும் விட விநோதமாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், “நான் 300 மைல் தொலைவில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ரயில் ஊழியர்கள் நிலைமையை நன்றாகக் கையாண்டார்கள். அதன் பிறகு நான் வீட்டிற்குச் சென்றேன், எனக்கு இது ஒரு சிறிய சிரமமாக இருந்தது.” என்றார்.

இது தொடர்பாக கலிடோனியன் ஸ்லீப்பருக்கான செர்கோவின் நிர்வாக இயக்குனர் கேத்ரின் தர்பாண்டி கூறுகையில், "ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையிலான எங்கள் இரவு நேர சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது லைனில் அடையாளம் காணப்பட்ட தவறு காரணமாக நிகழ்ந்தது. ஏனெனில் தீவிர வெப்பநிலை நெட்வொர்க் முழுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவை எங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தன."

“ஆகையால் பயணிக்க முடியாதவர்களுக்காக அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம், அதில் ஒரே இரவில் தங்கும் வசதி மற்றும் அடுத்த நாள் மாற்று ரயில் சேவைகளில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தோம். மேலும் அனைத்து பயணிகளும் முழு பணம் செலுத்தப்பட்டுவிடும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com